குடுவையாறில் அணை கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் ரூ.47,45,000 செலவில் குடுவையாற் றில் அணை உயர்த்தி கட்டப்பட உள்ளது.மங்கலம் தொகுதிக்குட்பட்ட கீழ்சாத்தமங்கலம் கிராமத்தின் வழியாக ஓடும் குடுவையாற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அரசின் மூலம் சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.இந்த அணையினை சீரமைத்து, உயர்த்தி கட்டி தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற அமைச்சர், உடனடியாக அரசின் ஒப்புதல் பெற்றார். மேலும், பொதுப்பணி துறையின் மூலம் 47 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அணையினை சீரமைத்து, உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுத்தார்.இதற்கான பணி துவக்கம் நேற்று முன்தினம் நடந்தது. அணை கட்டும் பணியை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நீர்பாசனக் கோட்டம் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் செல்வராசு, இளநிலைப் பொறியாளர் அருள்முருகன், விவசாயிகள் கலந்துகொண்டனர்.