பள்ளிக்கு முன்னாள் முதல்வர் பெயர் அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை
புதுச்சேரி: திருக்கனுாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் பெயரை சூட்டுவதற்கு அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் 2 முறை முதல்வராகவும், சபாநாயகர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் ராமச்சந்திரன். புதுச்சேரி அரசியலில் முக்கிய தலைவராக திகழ்ந்த இவர், மண்ணாடிப்பட்டு தொகுதியில் 6 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அவரது பெயரை அரசு பள்ளிக்கு சூட்ட வேண்டும் என, மண்ணாடிப்பட்டு தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக, பள்ளி, கல்வித்துறை சார்பாக அவரது பெயரை பரிந்துரை செய்து, கோப்பு முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.