வாட்ஸ் ஆப் முடக்கப்பட்டதால் க்யூ-ஆர் கோடுடன் வரும் எம்.எல்.ஏ.,
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., கென்னடி, தனது தொகுதியில் நடக்கும் நலத்திட்ட பணிகளை மக்களுக்கு தெரிவிப்பது மற்றும் தொகுதியில் உள்ள பிரச்னைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவது, கட்சி தொடர்பான தகவல்களை நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்திட தனது மொபைல் போனில் இரு 'வாட்ஸ் ஆப்' செயலியை பயன்படுத்தி வந்தார்.தற்போது சட்டசபை தேர்தலை கணக்கிட்டு மிகத் தீவிரமாக தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,வின் இரு 'வாட்ஸ் ஆப்' செயலிகளும் சில தினங்களுக்கு முன் அடுத்தடுத்து திடீரென துண்டிக்கப்பட்டது. உடனடியாக அதனை சரி செய்திட முடியவில்லை. காரணம் என்ன என்பதும் கண்டறிய முடியவில்லை.எம்.எல்.ஏ.,வின் சமூக பணிகளை முடக்குவதற்காக எதிர்க்கட்சியினர் தான், அவரது மொபைல் போனை 'ஹேக்' செய்து, 'வாட்ஸ் ஆப்'பை செயலிழக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.,, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தொகுதி மக்களுக்கு தனது தகவல்களை தெரிவிப்பதற்காக புதிதாக 'வாட்ஸ் ஆப்'சேனல் உருவாக்கி உள்ளார். அதனை தொகுதி மக்களுக்கு தெரியப்படுத்திட 'க்யூ ஆர்' கோட்டுடன் வந்து, தனது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்ய சொல்லி, தனது நலத்திட்ட பணிகள் குறித்த வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.