பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என நேரு எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 29.50 கோடி செலவில் பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கப்பட்டு, கடந்த 2ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறத்து வைக்கப்பட்டது.இருப்பினும், பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் நேரு எம்.எல்.ஏ., நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பஸ் நிலையம் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா, பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா, பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் நிறுத்துவதற்கு போதுமான இடங்கள் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, எஸ்.பி., செல்வம், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.