உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் தடையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியலால் பரபரப்பு

மின் தடையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியலால் பரபரப்பு

 புதுச்சேரி: மின் தடையை கண்டித்து விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார். குமரகுருபள்ளம், மீராசாய்பு வீதி, பச்சைமுத்துமாரியம்மன் கோவில் வீதியில் நேற்று காலை 9:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரமாகியும் மின்தடை சரி செய்யாததால் அப்பகுதி மக்கள் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் மின் துறை அலுவலகத்தில் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, சட்டசபையை முடிந்து வந்த விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., மின் தடையை கண்டித்து இரவு 7:50 மணிக்கு புதுச்சேரி நேரு வீதி, அண்ணா சாலை சந்திப்பு, ராஜா தியேட்டர் சிக்னலில் பொதுமக்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அவர், கூறுகையில், ‘மின்துறை அதிகாரிகள் யாரும் பேச்சு நடத்த வரவில்லை. இதுதான் புதுச்சேரியின் நிலை. அரசுக்கு மக்கள் பற்றி கவலை இல்லை. முதல்வருக்கே அதிகாரம் இல்லாதபோது, எம்.எல்.ஏ.,களுக்கு மரியாதை கிடையாது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் யாரும் வேலை செய்வது கிடையாது. 4 எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் பேசியும் மின் பிரச்னை சரி செய்யவில்லை’ என்றார். தகவலறிந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் மின்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., விடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்