சட்டசபையில் இருந்து துாக்கி போடுவதா வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆதங்கம்
புதுச்சேரி: சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கூறியதாவது: புதுச்சேரியில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் தீர்க்ப்படாமல் உள்ளது. இதனால் சட்டசபையை குறைந்தபட்சம் 5 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கான வாய்ப்பினை சபாநாயகர் கொடுக்கவில்லை. மக்களின் பிரச்னைகளை விவாதிக்கும் வகையில் சட்டசபையை கூட்டவில்லை. இதைக் கேட்டதால்தான் எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து துாக்கி போடுங்கள் என சபாநாயகர் கூறியுள்ளார். எம்.எல்.ஏ., க்களை இதுபோன்று நடத்தக் கூடாது. நாங்கள் நியாயமான முறையில் தான் இந்த கோரிக்கையை கேட்டோம். குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து துயர் துடைக்கவில்லை. ஒரு அரசினால் நல்ல குடிநீரை கூட தர முடியவில்லையென்றால் அந்த அரசாங்கத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இதனை தான் நாங்கள் சட்டசபையில் வெளிப்படுத்த விரும்பினோம். ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பினை கூட தரவில்லை. கடந்த சட்டசபையில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு 2,500 ரூபாய் உரிமைத் தொகை, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் என அறிவித்தனர். ஆனால் எதையும் செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன.ஏற்கனவே எதுவும் செய்யவில்லை. இதற்கு மேலும் மக்களுக்கு எதுவும் செய்ய போகின்றீர்களா என்றும் தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. ஜி.எஸ்.டி., கொண்டு வரும்போது ஒரே விகிதமாக கொண்டு வர வேண்டும் என காங்., கட்சி வலியுறுத்தியது. ஆனால் அப்போது 5 விதங்களில் வரி விதித்தனர். இப்போது தேர்தலுக்காக ஜி.எஸ்.டி.,யை குறைப்பதற்காக அறிவித்துள்ளனர். இவ்வாறு வைத்தியநாதன் கூறினார்.