உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உறுதிமொழி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... குற்றச்சாட்டு; வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆவேசம்

உறுதிமொழி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள்... குற்றச்சாட்டு; வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆவேசம்

புதுச்சேரி: சட்டசபையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை ஓராண்டாகியும் நிறைவேற்றாதது குறித்துநேற்று நடந்த சட்டசபை உறுதிமொழிக் குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக குற்றம் சாட்டியதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி சட்டசபை உறுதிமொழிக்குழு கூட்டம் நேற்று, சபாநாயகர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. குழு தலைவரான பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்களான நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன், லட்சுமிகாந்தன், சிவசங்கர், உள்ளாட்சி துறை செயலர் கேசவன், சட்டசபை செயலர் தயாளன், உள்ளாட்சி துறை இயக்குநர் சக்திவேல், நகராட்சி ஆணையர்கள் புதுச்சேரி கந்தசாமி, உழவர்கரை சுரேஷ்ராஜன், கொம்யூன் ஆணையர்கள் எழில்ராஜன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து பேசுகையில், 'மக்களுக்கான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி துறை மூலமே செய்ய வேண்டியுள்ளது. அதற்கான கோப்புகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்காமல் காலங்கடத்தப்படுகிறது. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அதிகாரிகள் மட்டத்திலேயே கோப்புகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்' என்றார். தொடர்ந்து குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: உள்ளாட்சி துறையில் பல பணியிடங்கள் காலியாக உள்ளது. உதாரணத்திற்கு நெட்டப்பாக்கம் கொம்யூனில் 62 பணியிடங்கள் காலியாக உள்ளதால், எந்த பணியும் நடைபெறவில்லை. இப்பிரச்னையை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில கேள்வி எழுப்பினோம். அப்போது, காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றனர். ஓராண்டாகியும் இதுவரை பணியிடம் நிரப்பவில்லை. கேட்டால், தேர்வு பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறீர்கள். உள்ளாட்சி துறை தனி அதிகாரம் கொண்டது. நீங்களே ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கான விதிகளை மாற்றுங்கள். ஆட்கள் நியமனம் செய்யும் வரை, தற்காலிகமாக 'அப்ரண்டிஸ்' அடிப்படையில் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கியும் பணி நடைபெறாததால் எங்களால், மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. அதேபோன்று குடிநீர் தொட்டி ஆபரேட்டர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. உங்களிடம் சம்பளம் தர நிதியும் இல்லை. குடிநீர் தொட்டிகளை பராமரித்திட ஆட்களும் இல்லை. அதனால், நிதியும், ஆள் பலமும் உள்ள பொதுப்பணித் துறையிடம் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் ஒப்படைத்திடுங்கள். இதுகுறித்து கடந்த சட்டசபை கூட்டத்தில், எழுப்பிய கேள்விக்கு முதல்வரும் சரி என்றார். ஆனால், அதனை இதுவரை செயல்படுத்தாதது ஏன்? ரெட்டியார்பாளையத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி முடித்து 2 மாதமாகியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாளிதழ்களில் கூட செய்து வந்துள்ளது. அதன்பிறகு திறந்தால், ஆர்ப்பாட்டம் நடத்தியதால் திறந்ததாக கூறுவார்கள். மேலும், வக்ப் வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இடங்களில் தடையில்லா சான்று பெற்று சமுதாய நலக்கூடங்கள் கட்ட வேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பவும், அதுவரை தற்காலிகமாக 'அப்ரண்டிஸ்' அடிப்படையில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெட்டியார்பாளையம் சமுதாய நலக்கூடம் பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும் என்றனர்.

'தினமலர்' செய்தியை

சுட்டி காட்டிய சபாநாயகர்

சபாநாயகர் செல்வம் பேசுகையில், 'இன்றைய 'தினமலர்' நாளிதழில் அரசு துறைகளில் அதிகாரிகள் இல்லாததால், பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதிகாரிகள் விரைந்து செயல்படாததே இதற்கு காரணம் என்றார். அதற்கு பதில் அளித்த அரசு செயலர், பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காததால், பல துறைகளில் துணை செயலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழில் செய்தி வந்துள்ளாக விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ