புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 கோடியில் நவீன கருவிகள்
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., - சிடி ஸ்கேன் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் தினசரி புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர் வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவிற்கு வந்து செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இம்மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லாமல் நோயாளிகள் அவதியடைந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பயன்பாட் டில் இருந்து வருகிறது.அதைத்தொடர்ந்து புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியில்லாமல் இருந்தது. இந்த மூன்று மருத்துவமனை நோயாளிகளும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்தனர். தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மூன்று மருத்துவமனைகளிலும் புதிதாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டது. இதில், ராஜிவ் காந்தி மருத்துவமனை எம்.ஆர்.ஜ., ஸ்கேன் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'சிடி' ஸ்கேன், (மாலிக்குலர் பயாலஜி லேப்) மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், மேமோகிராம் உள்ளிட்டவைகளும் ஒரே நேரத்தில் திறப்பு விழா காண தயார் நிலையில் உள்ளது.