நகர பகுதி வாய்க்காலில் ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி
புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நேற்று நடந்தது.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசு உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.அதையொட்டி கொசு உற்பத்தியை முழுவதுமாக ஒழிக்கும் விதத்தில் புதுச்சேரி நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் கொசு மருந்து தெளிப்பது, மாலை நேரத்தில் மிஷின்கள் மூலம் புகை மருந்து அடிக்கும் பணி நகராட்சி ஊழியர்களுடன், மகளிர் சுய உதவி குழு பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார் பேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளில் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் மட்டும் வாடகை 'ட்ரோன்' மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நேற்று துவங்கியது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி ஆம்பூர்- செஞ்சி சாலை இடையே செல்லும் பெரிய வாய்க்காலில் நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி தலைமையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் அண்ணா சிலையில் துவங்கி ஆம்பூர் சாலை வரை வரும் சின்ன வாய்க்காலில் மருந்து தெளிக்கும் பணி நடந்தது.