கலர் ஜெராக்ஸ் பத்திரம் கொடுத்து மோசடி மகள் மீது தாய் புகார்
புதுச்சேரி:அசல் பத்திரம் என கலர் ஜெராக்ஸ் கொடுத்து, பண மோசடியில் ஈடுபட்டதாக மகள் மீது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். லாஸ்பேட்டை, செல்வ செட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 70. இவரிடம், அரியாங்குப்பத்தில் வசித்து வரும் அவரது மகள் அனந்தநாயகி, 37; கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி குடும்ப தேவைக்காக பணம் கேட்டுள்ளார். அதற்காக, தனது வீட்டின் அசல் பத்திரம் என ஒன்றை கொடுத்து, ரூ. 2 லட்சம் பணம் வாங்கி சென்றார். அப்போது, பணத்தை திரும்ப கொடுத்து விட்டு, பத்திரத்தை வாங்கி கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனந்தநாயகி பணம் வாங்கி சென்று, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் பணத்தை திரும்ப தரவில்லை. இதையடுத்து, ராஜேஸ்வரி, அவரது மகள் அளித்த பத்திரத்தை ஆய்வு செய்தபோது, அது பத்திரத்தின் கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஸ்வரி லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரின், அவரது மகள் அனந்தநாயகி மீது போலீசார் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.