கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் நகராட்சி ஆணையர் கந்தசாமி தகவல்
புதுச்சேரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்கள், இதர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட கேளிக்கை, விருந்து, மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்துவோர் நகராட்சி சட்ட விதிகளின்படி உரிமம் பெற வேண்டும். எனவே கேளிக்கை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 7 நாட்களுக்கு முன்னதாகவே, புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு-2ல் கேளிக்கை உரிம கட்டணம், வருவாய் பிரிவு-1ல் கேளிக்கை வரியை செலுத்தி முன் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கேளிக்கைக்கான நுழைவு கட்டணம் தனியாக வசூலித்தாலும் அல்லது உணவு, மதுபானம் ஆகிய கட்டணங்களை மறைமுகமாக சேர்த்த வசூலித்தாலும் நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்.அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தினால் நகராட்சிகள் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து, நிகழ்ச்சி நிறுத்தப்படும். அந்த நிறுவனங்களின் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க நகராட்சி சார்பில், பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.