| ADDED : டிச 27, 2025 05:06 AM
புதுச்சேரி: கடலோர விடுதிகளில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழா விடுமுறையொட்டி, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடுவதற்கு, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள். புதுச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகள், மது பார்கள், திறந்த வெளி அரங்கங்கள் ஆகியவற்றில் மது விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், கடற்கரை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட கடலோர காவல்படை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக, கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்; கடற்கரையை ஒட்டிய ஓட்டல்கள் தங்கும் பகுதியில் போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற உயிர்காக்கும் வீரர்களை பணி அமர்த்த வேண்டும். அவர்கள் லைப் ஜாக்கெட், வளையங்கள், கயிறுகள், ஒலிபெருக்கி, முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டை அணிந்திருக்க வேண்டும். நிகழ்ச்சியை கண்காணிக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும். காவல்துறையின் முறையான அனுமதியின்றி, படகுகள், குளூஸ் கப்பல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. கடல் அலைகளில் ஏற்றம், இறக்கம் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடலில் இறங்கி, குளிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.