2 கிலோ நகைகளுடன் மாயமான அடகு கடைக்காரர் ராஜஸ்தானில் கைது
புதுச்சேரி : வாடிக்கையாளர்களின் அடகு நகைகளுடன் தலைமறைவான அடகுக்கடைக்காரரை ராஜஸ்தானில், போலீசார் கைது செய்தனர்.முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் விஜயக்குமார் மகன் ஜூகில் கிஷோர், 45; இவர் அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர், தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன், கடையை பூட்டி விட்டு 250 சவரன் (2 கிலோ ) நகைகளுடன் கிஷோர் மாயமானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த, வாடிக்கையாளர்கள் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜூகில் கிேஷார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ராஜஸ்தான் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையெடுத்து சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார், ராஜஸ்தானுக்கு சென்று, அங்கிருந்த ஜூகில் கிேஷாரை கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்தனர்.போலீசார் விசாரணையில், ஒரு சில நகைகளை விற்று இருப்பதும், எஞ்சிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பதும் தெரிய வந்தது. போலீசார் அவரை, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.