புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி அரசு நேற்று முன்தினம், ஒன்பது பி.சி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. இதில், சமூக நலத்துறை இயக்குநராக பணிபுரிந்து வந்த குமரனை, போக்குவரத்து துறை துணை ஆணையராகவும், கூடுதலாக பி.ஆர்.டி.சி., பொது மேலாளராகவும் நியமித்தது. இதைக்கண்டித்து, குமரனை மீண்டும் சமூக நலத்துறை இயக்குநராக நியமிக்க கோரி, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சாரதாம்பாள் நகரில், சமூக நலத்துறை அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. மாறன், அந்தோனி, ராஜூ, கார்த்திகேயன், ஜான் பீட்டர், லட்சுமணன் உள்பட, மாற்றுத்திறனாளி சங்கத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். போராட்டம் மதியம் 12:00 மணிக்கு நிறைவு பெற்றது.இது குறித்து, குழுவினர் கூறுகையில், 'சமூக நலத்துறை இயக்குநராக குமரன், கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும், உதவிகளையும் செய்தார். இவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், மிக குறுகிய காலத்தில் பணியிடத்தை மாற்றக்கூடாது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில், ஈடுபட்டோம்,' என்றனர்.