| ADDED : ஜன 26, 2024 05:20 AM
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம், அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு அளித்தார்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார்.அப்போது, ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு நிலவுதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மருந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதில் பல சிரமங்கள் உள்ளதால், நோடல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்.மேலும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை பிரிவு துவக்குவதற்கும், போதை மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும் மத்திய சுகாதாரத் துறை உதவ வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் புகழேந்தி, சுரேஷ் உடனிருந்தனர்.இதுகுறித்து அசோக்பாபு எம்.எல்.ஏ., கூறும்போது, 'மனுவை பெற்றுக் கொண்ட மத்திய சுகாதார அமைச்சர், ஜிப்மரில் மருந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், நோடல் அதிகாரியை நியமிப்பதாகவும் உறுதியளித்தார்.புற்றுநோய் சிகிச்சை மையம், போதை மறுவாழ்வு மையம் ஆகிய கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்தார்' என்றார்.