ஐ.டி. ஊழியர் மர்ம சாவு :போலீசார் விசாரணை
புதுச்சேரி: வில்லியனுார் அருகே சவுக்கு தோப்பில் மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 39; ஐ.டி.ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சவுக்கு தோப்பை பார்வையிட நேற்று முன்தினம் மாலை சென்றார். பின் இரவு வரை வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி, தம்பி ஆகியோர் நிலத்திற்கு சென்று பார்த்தபோது சந்திரசேகரன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.