உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புத்தாண்டிற்கு போலீசார் விரிவான ஏற்பாடு; புதுச்சேரியில் டிராபிக் இன்றி மக்கள் நிம்மதி

புத்தாண்டிற்கு போலீசார் விரிவான ஏற்பாடு; புதுச்சேரியில் டிராபிக் இன்றி மக்கள் நிம்மதி

புதுச்சேரி : புத்தாண்டை முன்னிட்டு போலீசாரின் விரிவான பாதுகாப்பு மற்றும் டிராபிக் மேலாண்மை ஏற்பட்டால், வாகன நெரிசல் இன்றி நகர மக்கள் நிம்மதி அடைந்தனர்.புத்தாண்டு கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர். கடற்கரை சாலை மற்றும் நகரின் பிரதான வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டை முன்னிட்டு, புதுச்சேரி போலீசார் போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். புதுச்சேரிக்குள் வரும் வெளி மாநில கார்களை கோரிமேடு, காலாப்பட்டு உள்ளிட்ட எல்லை பகுதியில் நிறுத்தி, கார் பார்க்கிங் இடங்களை கண்டறியும் கியூர் ஆர்கோட் நோட்டீஸ் வழங்கினர். ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதித்ததுடன், உப்பளம் துறைமுகம், பெத்திசெமினார் பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்து, பி.ஆர்.டி.சி., மூலம் சுற்றுலா பயணிகளை இலவசமாக கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்றனர்.தவிர சிக்னல்கள், முக்கிய சந்திப்புகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டதுடன், வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., தன்னார்வலர்கள் மூலம் சாலையில் நிறுத்தும் வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். இதனால் நகர சாலைகள் அனைத்திலும் நேற்று இரவு டிராபிக் பிரச்னை இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன. ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன், நாரா சைதன்யா, எஸ்.பி.,க்கள் தொடர்ந்து நகர பகுதிகளில் வலம் வந்து பாதுகாப்பு மற்றும் டிராபிக் பணிகளை தீவிரப்படுத்தினர்.வழக்கமாக சனி, ஞாயிறு கிழமைகளில் குவியும் சுற்றுலா பயணிகளால் நகர வீதிகள் கடும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும். ஆனால், புத்தாண்டு கொண்டாட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தும், போலீசாரின் விரிவான பாதுகாப்பு மற்றும் டிராபிக் மேலாண்மை ஏற்பாட்டால் டிராபிக் ஜாம் இன்றி புதுச்சேரி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை