உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காவல் நிலையம் கட்டுமான பணி மந்தம்

காவல் நிலையம் கட்டுமான பணி மந்தம்

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் கடந்த 1991ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது. பின்னர், போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, தொடர்ந்து வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் போலீசார் போதிய இட வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, மடுவுபேட், இ.சி.ஆரில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் நாராயணசாமி, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ஸ்டேஷன் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின், மீண்டும் மடுவுபேட் இ.சி.ஆரில் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் கட்ட ரூ.3.55 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'இந்த போலீஸ் ஸ்டேஷன் 225 சதுர மீட்டரில், இரு அடுக்கு மாடியுடன் ரூ.2.74 கோடி மதிப்பில் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்' என்றார். ஆனால், என்ன காரணத்தினாலோ கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி முடிவடையாமல் இருந்தது. இந்நிலையில், ஸ்டேஷன் கட்டுமான பணியை கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், ஒப்பந்ததாரரிடம் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதற்கு, அவர் ஒரு மாதத்தில் முடித்து கொடுப்பதாக கூறினார். ஆனால், மூன்று மாதங்களாகியும், கட்டுமான பணி முடிவடையாமலும், மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 8 மாதத்தில் முடிய வேண்டிய கட்டுமான பணி 37 மாதங்களாகியும் பணி நிறைவடையாததால், லாஸ்பேட்டை போலீசார் தற்போதுள்ள வாடகை கட்டடத்தில் இடப்பற்றாக்குறையால் வழக்கு கோப்புகளையும், கம்ப்யூட்டர்களையும் பாதுகாக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை