உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமை உறுப்பினர் செயலர் ரமேஷ் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமை உறுப்பினர் செயலர் ரமேஷ் வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 'வளர்ந்த பாரதம் 2047ல் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். மாசுக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தஸ்னீம் அபாஸி வரவேற்றார். நிரந்தர வளர்ச்சித் துறையின் தலைவர் சிவசத்யா வாழ்த்தி பேசினார். பேராசிரியர் அபாஸி நோக்க உரையாற்றினார்.கருத்தரங்கத்தில் 'வளர்ந்த பாரதம் - புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பங்களிப்பு' என்ற தலைப்பில் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:இந்தியாவிற்கு இயற்கை தந்த பொக்கிஷமாக புதுச்சேரி திகழ்கிறது. சிறிய பரப்பளவு கொண்ட புதுச்சேரியில் 5 ஆறுகள், 86 ஏரிகள், 600 குளங்கள் அமைந்துள்ளன. அழகான பகுதியாக திகழும் புதுச்சேரியை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, நமது அனைவரின் கடமையாகும். ஒரு மாநிலத்தின் தண்ணீர் வளம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், 50 சதவீத நிலத்தடி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 20 சதவீதம் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் இருந்தும், 15 சதவீதம் கடல்நீரை குடிநீராக்கியும், 15 சதவீதம் கழிவுநீரை சுத்திகரித்தும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், புதுச்சேரியில் 100 சதவீதம் நிலத்தடி நீரையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துவதால், ஆண்டுக்கு 1 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதனால், கடல் நீர் நிலத்தடி நீரில் கலக்கிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை தொழிற்சாலைகளுக்கும், பூங்காவிற்கும் பயன்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.இவ்வாறு, ரமேஷ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ