அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் மீது புகார்
புதுச்சேரி : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோமளா. இவர் மகன் சங்கர் திருநள்ளாரில் தாசில்தாராகப் பணி புரிகிறார். இவர் தன் நண்பர் ராஜேந்திரன் மூலம் திருநள்ளாறு, புதுச்சேரி பகுதிகளை சேர்ந்தவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் வ‹லித்துள்ளார்.வேலை கிடைக்காததால் அதிருப்தியடைந்தவர்கள், அவரது நண்பர் ராஜேந்திரனை நேற்று காலாப்பட்டு பகுதியில் சந்தித்து கேட்ட போது, தங்களிடம் வாங்கிய பணத்தை தாசில்தார் சங்கரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் ராஜேந்திரன், பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு ரெட்டியார்பாளையத்தில் உள்ள சங்கரின் தாயாரும், முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான கோமளா வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அங்கு பிரச்னை ஏற்படவே, விரைந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார், மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று கூறி, அனைவரும் கலைந்து போக செய்துள்ளனர். இவர்களின் புகாரை சி.பி.சி. ஐ.டி., போலீசாரும் வாங்க மறுத்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:திருநள்ளாரில் தாசில்தாராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., கோமளாவின் மகன் சங்கர், தன் நண்பர் ராஜேந்திரன் மூலம், காரைக்கால் கோவிலில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 12 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் கூறினர். மேலும் பணம் பெற்றுக் கொடுத்த ராஜேந்திரனைப் போலீசார் கைது செய்திருப்பதாகவும், அவரிடம் சங்கர் தரப்பினர் மிரட்டி கையெழுத்து பெற்றிருப்பதாகவும் கூறினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தெற்கு பகுதி எஸ்.பி., நந்தகோபாலிடம் முறையிட்டுள்ளனர். அவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., யிடம் கேட்ட போது, திருநள்ளாரில் உள்ள ராஜேந்திரன் என்பவரிடம் சிலர் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக கூறியுள்ளனர். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க கூறியுள்ளேன் என்றார். மேலும் போலீசார் ராஜேந்திரனை கைது செய்யவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வர் ரங்கசாமியை இன்று சந்தித்து முறையிட உள்ளனர்.