புதுச்சேரி - கடலுார் சாலை துண்டிப்பு நோயாளிகள், பயணிகள் கடும் அவதி
அரியாங்குப்பம்: கடலுார் சாலையில், நான்கு நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், நோயாளிகள், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடலுார் - புதுச்சேரி சாலை கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு, வில்லியனுார் வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.இந்நிலையில், கடலுார் சாலை, தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் ஆற்று பாலத்தின் இணைப்பின் ஒரு பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு, நேற்று முன்தினம், பாலம் உள் வாங்கியது. மீண்டும் கடலுார்- புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள், வில்லியனுார் வழியாக சுற்றி சென்றன. கடலுார் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு ஆம்புலன்சில் சென்ற நோயாளிகள், புதுச்சேரி, சென்னைக்கு சென்ற மக்கள் கடும் அவதியடைந்தனர்.மேலும், புதுச்சேரியில் இருந்து கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் மருத்துவர்கள், சிகிச்சைக்காக சென்ற நோயாளிகளும் சிரமப்பட்டனர். கடலுார் சாலையில் போக்குவரத்து எப்போது சீராகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.