உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.5.10 கோடி மோசடியில் 2.48 கோடி மீட்பு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி

ரூ.5.10 கோடி மோசடியில் 2.48 கோடி மீட்பு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.10 கோடி மோசடி செய்த வழக்கில், சைபர் கிரைம் போலீசார் ரூ. 2.48 கோடியை மீட்டு, ஒப்படைத்தனர்.புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சுகியா என்பவருக்கு, கடந்த மார்ச் 25ம் தேதி, அவரது நிறுவன உரிமையாளர் போல மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் குறுச்செய்தி அனுப்பினார். அதில் நிறுவனத்தின் பணிகளுக்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.5.10 கோடி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பிய சுகியா, அந்த வங்கி கணக்கிற்கு 5 தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பியுள்ளார்.அதன் பிறகு உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் மோசடியாக பணத்தை அனுப்பக்கூறியது தெரியவந்தது. இதுகுறித்து சுகியா அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்களை தேடினர்.அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மொபிகுல் ஆலம் முலா, 35; நசிபுல் இஸ்லாம், 34; கேரள மாநிலம் வட்டப்பாறையை சேர்ந்த அஜித், 30; மலப்புரத்தைச் சேர்ந்த சஷீல் சகத், 23; நபீ, 18; சஜித், 33; ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, மோசடி வழக்கில் பணம் பரிவார்த்தனை நடந்த வங்கி கணக்குகளை முடக்கி, இதுவரையில் 2 கோடியே 48 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் போலீசார் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்டனர்.இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய கர்நாடகாவை சேர்ந்த ஓம்கார் நாத், 42; தெலுங்கானாவை சேர்ந்த ராகவேந்திரா, 44; ஆந்திராவை சேர்ந்த சசிதர் நாயக், 26; பவாஜன், 36; ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், வங்கி கணக்கில் பணம் பரிவார்த்தனை செய்ய பயன்படுத்திய இன்டர்நெட் கனெக் ஷன்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்தனர்.பின், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக மோசடியில் ஈடுபடாமல், அவர்களது வங்கி கணக்குகளை மட்டும் கமிஷன்களுக்காக கொடுத்து உதவியது தெரியவந்துள்ளது. ஆகையால், மோசடி வழக்கில் வெளிநாட்டை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், அவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியுடன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே, மோசடி வழக்கில் மீட்கப்பட்ட 2 கோடியே 48 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களை வரவழைத்து, ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா நேற்று ஒப்படைத்தனர். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் கீர்த்தி, தியாகராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.இதுகுறித்து ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா கூறுகையில், 'சைபர் மோசடி வழக்குகளில், வங்கி கணக்குகளை மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்து, உதவியதால் மட்டும் இந்தாண்டு 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, பொதுமக்கள் கமிஷனுக்காக வங்கி கணக்கு, மொபைல் எண்களை மற்றவர்களுக்கு கொடுத்து சட்ட நடவடிக்கைளுக்கு ஆளாக வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pudhuvai Paiyan
ஜூன் 01, 2025 21:15

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், உண்மையான குற்றவாளிகள் மூலம் திரும்ப கிடைத்த தொகை குறைவுதான் ஆனால் பெரும்பான்மையான தொகை 3ம் வகை அப்பாவிகள் வங்கி கணக்கை உண்மை குற்றவாளிகள் பயன் படுத்தியதால் 3ம் வகை அப்பாவிகள் வங்கி கணக்கிலிருந்து அவர்கள் அனுமதியில்லாமலேயே அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட பணமே அதிகம். பணம் இழந்தவர்கள் பேராசைப்பட்டு மோசடியில் சிக்கியவர்கள் அல்லது ஆசைப்பட்டு சேமிப்பை பெருக்க நினைத்தவர்கள்


Kalyanaraman
ஜூன் 01, 2025 08:39

பாக்கி பணம்...?? அவ்ளோதானா ????


சமீபத்திய செய்தி