உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி துறைமுகத்தில் இட வசதியின்றி அவதிப்படும் கடலோர காவல் போலீசார்

மீன்பிடி துறைமுகத்தில் இட வசதியின்றி அவதிப்படும் கடலோர காவல் போலீசார்

புதுச்சேரி : தேங்காய்திட்டு மீன் பிடி துறைமுகத்தில், கடலோரப் போலீசாருக்கு இட வசதி செய்து தரப்படாததால், மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்கவும், கடல் வழி கடத்தலை தடுக்கவும் புதுச்சேரியில் கடலோரப் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் கடலோரக் காவல் படை சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி போலீஸ் துறையில், கடலோரக் காவல் நிலையம் (மரைன் போலீஸ்) சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. காரைக்காலில் மரைன் போலீசாருக்கு தனியாக கட்டட வசதியுடன் காவல் நிலையம் ஏற்படுத்தி, ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்பட்டு, ரோந்துப் படகு மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோல, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு மரைன் போலீசார் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இங்கு 4 போலீசார் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் உள்ளிட்ட ஐந்து பேர், சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிக்மா செக்யூரிட்டி பிரிவின் கீழ் பணியாற்றி வரும் இவர்கள், ரோந்து படகு மூலம் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரைன் போலீசார் இங்கு பணிக்கு அமர்த்தப்பட்ட நாள் முதல், இதுவரை எவ்வித அடிப்படை வசதியுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கி பணிபுரிவதற்கு தனி கட்டட வசதி ஏற்படுத்தப்படவில்லை. மேலும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை. போலீசார் அமர்வதற்கு நாற்காலி, பெஞ்ச் கூட இல்லை. மீன் வலையை சரி செய்யும் கூடத்தில் சுற்றிலும் தார்பாய் மூலம் தடுப்பு ஏற்படுத்தி, அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும், போலீசார் தங்கள் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இவர்களுக்கு உரிய இட வசதி செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை