| ADDED : ஜன 21, 2024 04:21 AM
1992ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, குஷ்பூ, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்த பாண்டியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் ஒரு காட்சி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே படமாக்கப்பட்டது. இதில், வில்லன் பிரபாகரை போலீஸ் அதிகாரியான ரஜினி கைது செய்து அழைத்து செல்வது போல் காட்சி எடுக்கப்பட்டது.இந்த படம் வெளிகி, வணிக ரீதியில் வசூல் ஈட்டாமல் தோல்வியை தழுவியது. 'பாண்டியன்' படம் தோல்வி சென்டிமென்ட் காரணமாக, புதுச்சேரியில் ரஜினி படத்தின் எந்த படப்பிடிப்பும் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெய்லர்' படத்தின் சண்டைகாட்சி பாகூர் அடுத்த அழகியநத்தம் பகுதியில் 2022ம் ஆண்டு படமாக்கப்பட்டது. இந்த படம் பெரிய ஹிட்டானதால், தோல்வி சென்டிமென்டை துார எறிந்து விட்டு, லால் சலாம், அதன் பின்னர் தற்போது வேட்டையன் என, ரஜினி படத்தின் படப்பிடிப்புகள் ஜோராக நடந்துள்ளன.மேலும் அடுத்த படத்தின் படபிடிப்பும் புதுச்சேரியில் நடத்துவதற்கு ரஜினி பச்சை கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி ரஜினிக்கு வெற்றி சென்டிமென்ட்டாக ஆகியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள சினிமா லொகேஷன் மேனேஜர்கள் கூறுகின்றனர்.