உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இன்று... துவக்கம்: கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இன்று... துவக்கம்: கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி:கடலுார் சாலையில் ரூ.72 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இன்று துவங்குகிறது.அதனையொட்டி, கடலுார் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே லெவல் கிராசிங் உள்ள சாலைகளில் மேம்பாலம் கட்டி வருகிறது. அதன்படி, தினசரி 33.32 லட்சம் வாகனங்கள் கடந்து செல்லும் புதுச்சேரி - கடலுார் சாலையில், ஏ.எப்.டி., திடல் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் அடிக்கடி மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரூ.72 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை புதுச்சேரி அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.55 கோடி, ரயில்வே நிர்வாகம் ரூ.17 கோடி என பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். ஆனால், அப்போது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி காரணமாக, ஏ.எப்.டி., திடலில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் இயங்கியதால், ரயில்வே மேம்பால பணி துவங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மறைமலையடிகள் சாலையில் கட்டப்பட்ட பஸ் நிலையம் கடந்த மே 2ம் தேதி திறக்கப்பட்டது. அதனால், அந்த மாதமே ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலுார் சாலைக்கு இணையான நுாறடி சாலை மேம்பாலம் சீரமைப்பு பணி துவங்கியது. இதற்காக கிழக்கு பகுதி பாலத்தை மூடி, அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் கடலுார் சாலை வழியாக திருப்பி விடப்பட்டதால், ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி துவங்க முடியவில்லை. அதே நேரத்தில், ரயில்வே கேட்டை நிறந்தரமாக மூடுவதற்காக உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக வனத்துறை மற்றும் நீதிமன்ற வளாகத்தையொட்டி, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. நுாறடி சாலை மேம்பாலம் சீரமைப்பு பணி பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. அதனையொட்டி, கடலுார் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான முதல்கட்ட பணி இன்று துவங்கப்பட உள்ளது. எஸ்.பி., ஆய்வு அதனையொட்டி போக்குவரத்து எஸ்.பி, செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று ஏ.எப்.டி., லெவல் கிராசிங் பகுதியை பார்வையிட்டு, ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தடையின்றி நடைபெற ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்தனர். இன்று முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து எஸ்.எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுாரில் இருந்த வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும். மேற்படி வாகனங்கள் முதலியார்பேட்டை சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படாது. கடலுார் மார்க்கத்தில் இருந்த வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் பள்ளி பஸ்கள் மட்டும் முதலியார்பேட்டை சாலை வழியே சென்று, விநாயகமுருகன் டீ கடை சந்திப்பில் வலதுபுறம் திருப்பி, அம்பேத்கர் சாலை வழியாக சோனாம்பாளையம் சந்திப்பை நோக்கி செல்ல வேண்டும். கடலுார் மார்க்கத்தில் இருந்து வரும் இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கமாக முதலியார்பேட்டை சாலையில் ஏ.எப்.டி., ரயில்வே லெவல் கிராசிங் வரை சென்று, அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை வழியாக செல்ல வேண்டும். வெங்கடசுப்பையா ரெட்டியார் சிலை சந்திப்பில் இருந்து வரும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், கடலுார் சாலையில் கோர்ட் வளாகம் அருகே சற்று வலதுபுறமாக திரும்பி, புதிதாக அமைத்துள்ள சிமென்ட் சாலையில் செல்ல வேண்டும். கோர்ட்டிற்கு செல்லும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் 1வது நுழைவு வாயில் வழியாகவும், பொதுமக்கள் 2வது நுழைவு வாயில் வழியாக செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது, பிரதான நுழைவு வாயிலின் இடதுபுறமாக திரும்பி, சிமென்ட் சாலை வழியாக வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையை நோக்கி செல்ல வேண்டும்.

நான்கு வழி மேம்பாலம்

புதிய மேம்பாலம் புரோவிடன்ஸ் மால் அருகில் இருந்து துவங்கி, மில் ரோட்டிற்கு 15 அடிக்கு முன்னதாக முடியும் மேம்பாலம், 630 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக கட்டப்பட உள்ளது. மேலும், பாலத்தின் இருபுறத்திலும் சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

கேட் மூடப்படாது

முதல்கட்டமாக ரயில்வே கேட்டிற்கு வலது புற சாலையின் கிழக்கு பகுதியில் பில்லர்கள் அமைக்கப்பட உள்ளது. அதனால், தற்போதைக்கு ரயில்வே கேட் மூடப்படமாட்டாது. வழக்கம் போல், மூடி திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை