தரமான சாலைகள் அமைக்க ராஜிவ் யுவகேந்திரா கோரிக்கை
புதுச்சேரி : தரமான சாலைகள் அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜிவ் யுவகேந்திரா நிறுவனர் வெங்கடாசலபதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் புதிதாக போடப்பட்ட ஆரியப்பாளையம் பாலம் உள்வாங்கியது. 100 அடி சாலை மேம்பாலம் சேதமடைந்துள்ளது. இதேபோல், கடந்தாண்டு மரப்பாலம் முதல் முள்ளோடை வரை அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.தமிழக கிராமங்களில் உள்ள சாலைகளின் தரம் கூட புதுச்சேரி நெடுஞ்சாலைகளில் இல்லை. இதனை பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏன் கண்டு கொள்வதில்லை. சாலைப் பணிகள் முடிந்தவுடன் சேதம் அடைந்தால் அதை உடனே பழுது பார்க்க வேண்டும். ஆனால் முழுதும் சேதம் அடைந்தபின், பேட்ச் ஒர்க் என்ற பெயரில் சாலைகள் போடப்படுகிறது. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் போடப்பட்ட சிமெண்ட் சாலைகளின் நடுவே கழிவுநீர் மேனுவல் அமைக்கபட்ட இடம் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலை அமைக்கும் பணியின்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.