வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்
புதுச்சேரி: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள, 18 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படை சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன், புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த, 15 பேர்; தமிழகத்தை சேர்ந்த, 3 பேர்; என மொத்தம், 18 மீனவர்கள், இலங்கை கடற்கடையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இரு மாநில மீனவர்கள் மத்தியிலும் பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.