| ADDED : டிச 30, 2025 05:37 AM
புதுச்சேரி: கண்ணனின் கண்களில் நாம் கண் வைத்தால், கண்ணன் நம் மீது கண் வைத்துக் காப்பான் என ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார். முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவ உபன்யாசம் கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. நேற்றைய 14 நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: சேதனர்கள் செய்யும் தவறுகள் கூட எம்பெருமான் கண்ணைச் சரணடைந்து, தன் தவறுணர்ந்து முறையிட்டால், தீயுனுள் துாசு போல் ஆகிவிட, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பதே 14ம் பாசுரம் சொல்லும் உண்மை. இதனால் தான் நம்மாழ்வார் நமக்கு ஏற்பட்டுள்ள மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடத்து ஒடுக்க வேண்டும் என்கிறார். எதை மனதால் நினைக்கிறமோ, அதை வாக்கால் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னதையே செய்ய வேண்டும். உள்ளத்தில் எண்ணியதைக் கரவாது வாயால் உரைப்பதே வாய்மையாகும். வாய்மையால் உரைத்தவாறே மெய்யால் செயல் புரிவதே மெய்மையாகும். இங்ஙனம் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது தத்தம் இயல்பில் நிற்பதே துாய்மை எனப்படும். இது தான் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே, தந்தை தாயென்று அடைதலே முப்பொறித் துாய்மை எனும் “த்ரிகரண சுத்தி” என்று வேதம் உரைத்த தத்துவத்தைத் தான் ஆண்டாள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பாசுரத்திலும் ஏதோ ஒரு வகையில் உள்ளுரைப் பொருளாக உணருமாறு அருளியுள்ளாள். பகலவனைக் கண்ட தாமரை மலர்வதைப் போல, பக்தர்களக் கண்ட பகவானின் கண்கள் மலர்கின்றன என்பதைத் தான் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் பங்கயக் கண்ணன் என்ற சொல்லால் உணர்த்தியுள்ளாள். எல்லாம் அவன் இட்ட வழக்காய், நிலை தந்த தாரகனாய், நியமிக்கும் இறைவனுமாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, என் அமுதினைக் கண்ட கண்கள், மற் றொன்றினைக் காணாவே என்று கரைந்து கண்ணனின் கண்களில் நாம் கண் வைத்தால், கண்ணன் நம் மீது கண் வைத்துக் காப்பான். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.