பிரதம மந்திரி குழந்தைகள் நலத் திட்ட பயனாளிகளுடன் மறு ஆய்வு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், பிரதம மந்திரி குழந்தைகள் நலத் திட்ட பயனாளிகளுடன் மறு ஆய்வுக் கூட்டம் நடந்தது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 13 பயனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். இதில், பிரதம மந்திரி குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதார நிலை குறித்து கலெக்டர் குலோத்துங்கன் விரிவாக ஆய்வு செய்து விவாதித்தார். மேலும், பயனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த ஆதரவு உறுதி செய்யப்படும்' என்றார். கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் முத்துமீனா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரியா, குழந்தைகள் பாதுகாப்பு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.