சங்கராபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்
திருக்கனுார் : செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வில்லியனுார், ஒதியம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஹென்றி ஹையர் துரை. இவரது மகன் லியோ ஆதித்யன், 16; ரெட்டியார்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று மாலை தனது நண்பரான ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் வில்லியனுார் அருகேயுள்ள செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் சமீபத்திய மழை மற்றும் வீடூர் அணை திறப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். பின்னர், இருவரும் சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக மாலை 5:00 மணி அளவில் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்தோணியை மீட்டு, ஊசுட்டேரி தனியார் மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.ஆனால், லியோ ஆதித்யன் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கி மாயமான லியோ ஆதித்யனை தீவிரமாக தேடி வருகின்றனர்.வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், மாணவர்கள் இருவர் ஆற்றில் இறங்கி குளித்தபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீயணைப்பு துறையினர் மீது பொதுமக்கள் ஆவேசம்
மாணவன் வெள்ள நீரில் மூழ்கியது மாலை 5:00 மணிக்கு தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு துறையினர் காலதாமதமாக 6:00 மணிக்கு மேல் தான் செல்லிப்பட்டு வந்தடைந்தனர். இருப்பினும், பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி தேடிய நிலையில், 8:00 மணி வரையில் தீயணைப்பு துறையினர் யாரும் தண்ணீர் இறங்கி தேடவில்லை. இதனால், கோபமடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்த மீட்பு பணி உபகரணங்களை ஆற்று தண்ணீரில் துாக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.