உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகசிய சர்வே! மக்களிடம் யாருக்கு செல்வாக்கு... காங்., கட்சியில் திடீர் உற்சாகம்

ரகசிய சர்வே! மக்களிடம் யாருக்கு செல்வாக்கு... காங்., கட்சியில் திடீர் உற்சாகம்

புதுச்சேரி அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியே அதிக காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்துள்ளது. இதனால், வேறு எந்த கட்சிக்கும் இல்லாத அளவிற்கு நகரம் முதல் பட்டி தொட்டி வரை கட்சி கிளைகளுடன் கட்டமைப்பு கொண்ட கட்சியாக காங்., கட்சி உள்ளது. இருந்த போதிலும், கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அவர்களும், கட்சிக்கு புதிய வரவாக வந்தவர்களே. கட்சியில் ஆண்டாண்டு காலமாக அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் தோல்வியை தழுவினர். இது, புதுச்சேரி மாநில காங்., கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையை மாற்றி, வரும் 2026 தேர்தலில் மீண்டும் புதுச்சேரியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிட கட்சி தலைமை முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, வரும் தேர்தலில் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பெறுவதில், கடும் போட்டி நிலவி வருகிறது. அதனை அறிந்த காங்., தலைமை கூட்டணியில் நமக்கு அதிக தொகுதி பெற்றிட, அனைத்து தொகுதிகளிலும் கட்சி செல்வாக்கை வளர்த்திட வேண்டும். அதனால், கூட்டணியை பற்றி கவலைப்படாமல், 30 தொகுதிகளிலும் தேர்தல் பணியை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், கட்சி தலைமை, மாநிலத்தில் தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனிச் செல்வாக்கு. காங்., கட்சிக்கு உள்ள செல்வாக்கு. கூட்டணியில் காங்., கட்சிக்கு எந்த தொகுதியை பெறுவது. ஒவ்வொரு தொகுதிகளிலும் காங்., கட்சியை சேர்ந்த நிர்வாகிகளில் யார், யாருக்கு செல்வாக்கு உள்ளது. யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பது குறித்து ரகசிய சர்வே செய்துள்ளது. இதில் காங்., கட்சிக்கு சாதகமான தொகுதிகளை கூட்டணியில் பெறுவதற்கு வசதியாக, தற்போதே வேட்பாளர்களை தயார்படுத்திட நடவடிக்கையை முடுக்கவிட்டுள்ளது. தலைமையின் இந்த நடவடிக்கையால், கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்., தொண்டர்கள் புலம்பல்

மாநிலத்தில் காங்., கட்சியை பலப்படுத்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத் தக்கது. அதே நேரத்தில், தன் கட்சி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே கட்சியின் பிரதான பணியாக இருக்க வேண்டும். ஆனால், என்ன காரணத்தினாலோ தற்போது நடைபெற்ற வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை காங்., நிர்வாகிகள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கியே உள்ளனர். ஆனால், இப்பணியில் பா.ஜ.,வினர் வீதி, வீதியாக சென்று ஓட்டுச்சாவடி வாரியாக தங்கள் ஆதாரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், காங்., கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளின் அலட்சியத்தினால், காங்., தலைமை எடுக்கும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகி விடுமோ என தொண்டர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ