பைக்குகள் மோதல் செக்யூரிட்டி பலி
பாகூர்: பாகூர் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை சந்திப்பில் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில், செக்கியூரிட்டி இறந்தார். பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்து,52; வடமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவன செக்யூரிட்டி. நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, பைக்கில் விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலையில் வீட்டிற்கு புறப்பட்டார். இரவு 7:30 மணிக்கு பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு அருகே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற முத்து பைக் மீது மோதியது. விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, முத்து ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். மற்றொரு பைக்கில் வந்த விழுப்புரம், கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கிளிண்டன்,20; சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொடரும் விபத்துக்கள்
வி ழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பின்னாட்சிக்குப்பம் சந்திப்பில், மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. புறவழிச்சாலையை குறுக்காக கடந்து செல்வதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு அமைத்தனர். இதனை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியால், தடுப்பு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், புறவழிச்சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கி இறப்ப து தொடர் கதையாகி உள்ளது.