மக்கள் நலன் கோப்புகளை இழுத்தடிக்கும் அதிகாரிகள் சபாநாயகர் செல்வம் ஆவேசம்
புதுச்சேரி: கோப்புகளை அதிகாரிகள் பல மாதமாக இழுத்தடிப்பதால் மக்கள் நல பணிகள் பாதிக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.தனியார் பள்ளிகள் குறித்து சபாநாயகர் செல்வம் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நேற்று சபாநாயகர் செல்வம் கூறியதாவது:தனியார் பள்ளி மாணவர்களை எந்த இடத்திலும் சைக்கோ என்று சொல்லவில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் அங்குள்ள அழுத்தம் காரணமாக, அவர்கள் படித்து முடித்த பிறகு பணிபுரியும் இடங்களில் அது போன்று நடந்து கொள்வதாக நான் குறிப்பிட்டேன்.அரசு பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஒரு மணி நேரம் விளையாடுகின்றனர். பின்னர் பெற்றோருடன் நேரத்தையும் செலவிடுகின்றனர். ஆனால் தனியார் பள்ளிகளில் இரவு 9:00 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. பெற்றோருடன் கலந்துரையாடும் நேரமும் குறைந்து விடுகிறது. இது போன்ற நிலை தான் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது.தலைமை செயலகத்தில் பணியாற்றும் செயலர்கள், ஊழியர்கள் அனைவரும் கோப்புகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க இ-பைலிங் சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. இதனை கடைபிடிப்பது இல்லை. இதனால் கோப்புகள் பல மாதமாக இழுத்தடிக்கப்படுவதால் மக்கள் நலப்பணிகள் தான் பாதிக்கப்படுகிறது.சட்டசபை கட்டுமான பணி கோப்பு மட்டும் அல்ல. இலவச அரிசி கோப்பும் பல மாதமாக சுற்ற விட்டதால் 5 மாதம் கால தாமதம் ஏற்பட்டது. இப்படி மக்கள் நலன் பாதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.