உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில திட்டக்குழு பெயர் மாற்றத்துடன் 28ல் கூடுகிறது; ரூ.13,500 கோடிக்கு பட்ஜெட் இறுதியாகிறது

மாநில திட்டக்குழு பெயர் மாற்றத்துடன் 28ல் கூடுகிறது; ரூ.13,500 கோடிக்கு பட்ஜெட் இறுதியாகிறது

புதுச்சேரி : மாநில திட்ட குழு, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான ஆலோசனை குழுவாக மாற்றப்பட்டுள்ளது. இக்குழு, வரும் 28ம் தேதி முதல்வர் ரங்கசாமி தலைமையில் கூடி மாநில பட்ஜெட்டினை இறுதி செய்கிறது.இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 112-ன்படி, அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டு பட்ஜெட் (வரவு செலவு நிதிநிலை அறிக்கையை) கவர்னரின் ஒப்புதல் பெற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.பொதுவாக மாநிலங்களில் பட்ஜெட் கேபினட்டில் தீர்மானம் செய்த பிறகு அதனை சட்டசபையில் முன் வைத்து, விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி அரசால் தயாரிக்கக்கூடிய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகே சமர்ப்பிக்கப்படுகிறது.அதன்படி, அடுத்த 2025-26ம் நிதி ஆண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட் தயாரிக்க முன் ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் முழு வீச்சில் இறங்கி வரவு செலவுகளை ஆய்வு செய்து வந்தன.அரசு துறைகளில் இந்த மதிப்பீடு அனைத்தும் முடிந்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மாநில பட்ஜெட்டினை இறுதி செய்வதற்கான மாநில திட்ட குழுவின் கூட்டம், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கொள்கை ஆலோசனை குழு என்ற பெயர் மாற்றத்துடன் வரும் 28ம் தேதி மாலை 4:45 மணிக்கு தலைமை செயலகத்தில் கூடுகிறது.கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் கூடும் இக்கூட்டத்தில் மாநில பட்ஜெட் 13,500 கோடி ரூபாய்க்கு இறுதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப் படுகின்றது.

பெயர் மாற்றம் ஏன்?

மாநில அரசின் பட்ஜெட் திட்ட செலவுகள், திட்டம் சாரா செலவுகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. மத்திய அரசின் உத்தரவினை தொடர்ந்து, திட்டம் என்பது முதலீட்டு செலவும் என்றும், திட்டம் சாராத செலவுகள் வருவாய் செலவுகள் என்றும் பெயர் மாற்றி கடந்த 2018ம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம், துறைகளின் பல கணக்கு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு முடிவுக்கு வந்துள்ளன. அரசு துறைகள் தங்களுடைய தேவைக்கேற்ப திட்டம் மற்றும் திட்டம் சாராத செலவினங்களை மாற்றி செலவு செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆனால் பட்ஜெட்டினை இறுதி செய்யும் மாநில திட்ட குழுவின் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்போது, மாநில திட்ட குழுவின் பெயரும், இனி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கொள்கை ஆலோசனை குழுவாக மாற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி பட்ஜெட் இறுதி செய்யப்பட்டதும், மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேச வரவு செலவு திட்டத்தினை ஆய்வு செய்து, வரவு செலவின் ஆண்டு விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் வரவு செலவு அறிக்கை மாற்றியமைத்து, அனுமதி அளிக்கும்.அதன் பிறகு சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டினை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில திட்ட குழு கடந்து வந்த பாதை

திட்ட ஆராய்ச்சி துறையின் கீழ், இருந்த கமிட்டி முன்பு, பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்தது. அடுத்து, புதுச்சேரி மாநில திட்ட குழு கடந்த 1997ம் மார்ச் 7 ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பின் 2009ல் மாற்றியமைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. மீண்டும் 2011ல் மாநில திட்ட குழு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான ஆலோசனை குழுவாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. இக்குழுவில் கவர்னர் சேர்மன், முதல்வர் துணை சேர்மன், எம்.பி.,க்கள், அனைத்து அமைச்சர்கள் என 13 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி