ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சில்லறை பண வீக்க விகிதத்தில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரிக்கு அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. பொருட்களை கொண்டு வருவதில் உள்ள வினியோக சங்கிலி குறைபாடுகள், முறைடு விலைவாசி உயர்வை தீவிரப்படுத்துகின்றன. ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வினியோகிக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை வெளிமாநிலங்களில் மொத்தமாக கொள்ளுதல் செய்து மானிய விலையில் வழங்க வேண்டும். புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் குளிர்பதன கிடங்குகள் உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடிய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பயிரிட அரசு ஊக்க தொகை வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.