மாணவர் தற்கொலை
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பாரதி, 18; லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்லுாரியில் பி.காம், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற பாரதி நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். அதற்கு, அவரது தாய் சுந்தரி, ஏன் வெகு நேரம் கழித்து வருகிறாய் என, கேட்டு கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பாரதி, வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். சிறிது நேரத்திற்கு பின், சுந்தரி கதவைத் தட்டி திறக்குமாறு கூறினார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியே பார்த்துபோது, பாரதி மின் விசிறியில் துாக்குப் போட்டுக் கொண்டது தெரிய வந்தது. அவரை மீட்டு,கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.