| ADDED : ஜன 10, 2024 01:47 AM
பாகூர் : பாகூர் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தச்சு தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் அடுத்த சேலியமேடு, பழைய வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சங்கர் 40; தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது, பாகூர் தியாகி கேசவன் நகரில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்தார். சில நாட்களுக்கு முன், சங்கருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பாகூர் தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமாகவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக, ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அச்சம்
பாகூர் பகுதியில் கடந்த 3 மாதங்களில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஜிப்மரில் சிகிச்சை பெற்ற தச்சு தொழிலாளி இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.