தொழிற்சாலைகள் குறித்து கணக்கெடுப்பு... தேவை; தொழில் துறையினர் பெரிதும் எதிர்பார்ப்பு
புதுச்சேரி: மாநிலத்தில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை அரசு கணக்கெடுத்து, சலுகைகள் வழங்க வேண்டும். புதுச்சேரியில் தொழில் தொடங்க, வரி சலுகைகள், மின் கட்டண சலுகை, மானியத்துடன் கடன் வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள், கடந்த காலங்களில் வழங்கப்பட்டதால்,தொழிலதிபர்கள் போட்டிபோட்டு தொழில் துவங்கினர். அமைதியான சூழல், தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவைகளும் தொழில் முனைவோரை கவர்ந்திழுத்தன. தட்டாஞ்சாவடி, திருபுவனை, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, மணப்பட்டு, கிருமாம்பாக்கம் மற்றும் காரைக்காலில் தொழிற்பேட்டைகள் உருவாகின. தொழிற்சாலைகள் ஓட்டம்: ஆனால்,தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறைப்பு,ரவுடிகள் முதல் அரசியல் கட்சியினர் வரை, மாமுல் கேட்டு மிரட்டுவது, தொழிற்சங்கங்களின் நெருக்கடி, பூதாகரமாக உருவெடுத்த சுமை துாக்குவோர் மற்றும் தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதுச்சேரியில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளையும் இழுத்து மூடிவிட்டு, விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.இப்போது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு இல்லை. எந்தந்த தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன, எந்த தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன, என்ற தகவல்கள் இதுவரை இல்லை. அந்த தொழிற்சாலைகள் ஏன் முடங்கின என்பதை பற்றிய விரிவான ஆய்வும் செய்யப்படவில்லை.மாநிலத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் 9240, நடுத்தர தொழிற்சாலைகள் 191, பெரிய தொழிற்சாலைகள் 77 என மொத்தம் 9,508 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 3,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவ்வளவு எண்ணிக்கையில் மாநிலத்தில் தொழிற்சாலைகள் இல்லை. குடிசை தொழில்கள் எல்லாம் தொழிற்சாலைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது.பல தொழிற்சாலைகள் நலிவடைந்து, இழுத்து மூடப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போது இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து உண்மையான கணக்கெடுப்பு இல்லாமல் உள்ளது தொழில் துறையில் பின்னடைவையே ஏற்படுத்தும். கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அன்மையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு மறுஉயிர் கொடுக்க முயலுமா என்பதை மாநில அரசு ஆராய்ந்தால், இன்னும் பல ஆயிரக்காண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கான முழுமையாக கணக்கெடுப்பினை தொழில் துறை வாயிலாக அரசு துவக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.