டேக்வாண்டோ போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் நடந்தது. சப் ஜூனியர் கேடட், ஜூனியர், சீனியர் என 100க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், ஆகிய பகுதிகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை மேஜிக் லெக் டேக்வாண்டோ மார்ஷல் ஆர்ட் கிளப்பும், இரண்டாம் இடத்தை புதுச்சேரி டேக்வாண்டோ மார்ஷல் ஆர்ட் கிளப்பும், மூன்றாம் இடத்தை புத்தா சாம்பியன் டேக்வாண்டோ கிளப்பும் பெற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு, சங்கம் நிறுவன தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்றார். டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா அப்சர்வர் மனோகர், சர்வதேச நடுவர் பகவத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவாலயா சிவா புதுச்சேரி ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகர், சி.இ.ஓ., முத்துகேசவேல் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். நிர்வாகிகள் அழகரசன், டாக்டர் மணிகண்ட ஜோதி, ஜனகராஜ், சட்ட ஆலோசகர் அருள்கோஸ் உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை கிளை செயலாளர் தக் ஷண பிரியா செய்திருந்தார். பொருளாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.