உணவு பரிமாறிய கலெக்டர் துப்புரவு பணியாளர்கள் நெகிழ்ச்சி
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு விருந்தளித்து, கலெக்டர் உணவு பரிமாறியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் கடற்கரை துாய்மை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏராளமான துப்புரவு பணியாளர்கள், கடற்கரையை சுத்தம் செய்தனர்.அந்த பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், கலெக்டர் மணிகண்டன், மதிய விருந்து அளித்தார். அதுமட்டுமின்றி அவரே வாழை இலை போட்டு, வடை, பாயசத்துடன் உணவையும், பரிமாறினார். கலெக்டருடன் அதிகாரிகள் சிலரும் உணவு பரிமாறினர்.இதையடுத்து துப்பரவு பணியாளர்கள், கலெக்டரிடம் தங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, கண்ணீர் விட்டனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க, கலெக்டர் உத்தரவிட்டார்.