| ADDED : ஜன 18, 2024 04:07 AM
புதுச்சேரி: காலாப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து இறந்த பெண்ணின் கணவரும் மன உலைச்சலில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரன், 38; மீனவர். இவரது மனைவி கலைச்செல்வி, 36. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு ரூ. 5 லட்சம் கடன் கொடுத்தார். அவர், கடனை தராமல் காலம் கடத்தினார்.இது தொடர்பாககடந்த செப்டம்பரில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் ஏழுமலை புகார் அளித்தார். அதன்பேரில், சந்திரனை போலீசார்விசாரணைக்கு அழைத்தனர்.சந்திரனும், கலைச்செல்வியும் காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு செப்., 27ம் தேதி சென்றனர். ஏழுமலைக்கு ஆதரவாக காலாப்பட்டு போலீசார் செயல்பட்டதை பார்த்த கலைச்செல்வி, விரக்தியடைந்தார். போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, தாங்கள் வந்த டூவீலரில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து உடலில் ஊற்றித் தீக்குளித்தார். மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காலாப்பட்டு போலீசாரை கண்டித்து மீனவர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து உயிரிழந்த கலைச்செல்வி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் தரப்படும் எனவும், கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.அதனையேற்று சப் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கலைச்செல்வி இறந்த துக்கத்தில் இருந்த சந்திரன் நேற்று மாலை தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமைனை அனுப்பினர்.இறந்த சந்திரனுக்கு நவீன், வருண் என்ற மகன்கள் உள்ளனர். நவீன் பிளஸ் 1, வருண் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். கலைச்செல்வி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் தரப்படும் என அரசு தரப்பில் உறுதியளித்த சூழ்நிலையில் எந்த நிவாரணமும் தரப்படவில்லை. இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் மன உளைச்சலில் சந்திரன் அடிக்கடி புலம்பி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.