இந்தியத் துணைக்கண்டத்தின் வரைபடத்தில் புதுச்சேரி ஒரு வித்தியாசமான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒரே நிலமாகத் இல்லாமல், ஆந்திரா, கேரளா, தமிழகத்தின் உடலுக்குள் சிறு சிறு நிலப்பகுதிகளாக... துண்டு துண்டாக சிதறி கிடக்கிறது. இப்படி புதுச்சேரி வரைப்படத்தில் இடம் பெற்றிருப்பது, பிரஞ்சியரின் வெறும் நிர்வாகத் தன்மையால் ஏற்பட்டதல்ல. அது காலனிய அரசியலின் திட்டமிட்ட விளைவு. அதிகாரப் போட்டிகளின் பக்கவிளைவு என்று சொன்னாலும் மிகையில்லை. மொத்தம் 284 சதுர கி.மீ., பரப்பளவில், 213 கிராமங்கள், 13 துண்டுத் துண்டான நிலப்பகுதிகள் எனப் புதுச்சேரி இன்றைக்கு காணப்படும் இந்தப் பரவல், வரலாற்றின் பல திருப்பங்களால் உருவானது. இந்தியாவில் ஆங்கிலேயரும், பிரஞ்சியரும் நடத்திய அதிகாரப் போட்டி, வெறும் வணிகச் சண்டையாக இல்லாமல், நேரடியான ராணுவ மோதல்களாக மாறியது. ஏழாண்டு போருக்குப் பிறகு, 1763 பிப்ரவரி 10 அன்று கையெழுத்தான பாரிஸ் ஒப்பந்தம் மூலம், பிரஞ்சியருக்கு அவர்களது பழைய இந்தியப் பகுதிகள் மீண்டும் வழங்கப்பட்டன. ஆனால் அந்த வழங்கல் முழு அதிகாரத்துடன் கூடியதாக இல்லை. பிரஞ்சியரின் ஆட்சி விரிவாக்க கனவை அடக்குவதற்காக ஆங்கிலேயர், பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். கோட்டைகள் கட்டத் தடை, குறைந்தபட்ச படை வலிமை, ஆயுதங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு போன்றவை அவற்றுள் முக்கியமானவை. ஆங்கிலேயரின் கணக்குகள் தவறவில்லை. சந்திரநாகூரை ஒதுக்கிவிட்டு, பிரஞ்சியர் புதுச்சேரியைத் தங்கள் முக்கியத் தளமாகக் கொண்டு காலனி விரிவாக்கத்தில் ஈடுபட்டனர். ஐதர் அலி, திப்பு சுல்தான் போன்ற உள்ளூர் ஆட்சியாளர்களுடன் கூட்டணி அமைத்ததும், புஸ்சி, சுய்ப்ரேன் போன்ற தளபதிகள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், பிரஞ்சியரின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆங்கிலேயரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. 1814ம் ஆண்டில் உருவான மூன்றாவது, இறுதி பாரிஸ் ஒப்பந்தம், பிரஞ்சிந்தியப் பகுதிகளை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. இதில், கோட்டைகள் கட்டத் தடை விதிக்கப்பட்டது. ராணுவப் பலம் கடுமையாகக் குறைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. பிரஞ்சியரின் ஆட்சியுரிமை, அதிகார வரம்பு குறைத்தல், நாணயம் தயாரிக்கும் உரிமை மறுப்பு. வணிகம், உப்பு, மது, சுங்கம் ஆகியவற்றில் ஆங்கிலேயரின் முடிவு இறுதி எனப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.ஆனால் இங்கு தான் மற்றொரு திருப்பமும் ஏற்பட்டது. நிபந்தனைகள் மட்டுமே போதாது என, எண்ணிய ஆங்கிலேயர், நிலவியல் அடிப்படையிலான அரசியலையும் செயல்படுத்தினர். ஏறத்தாழ 23 ஆண்டுகள் பிரஞ்சிந்தியப் பகுதிகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவற்றைதிருப்பி கொடுக்கும்போதுபுதுச்சேரியின் நில அமைப்பினை திட்டமிட்டு மாற்றினர். ஒரே நிலமாக இருந்தால், என்றாவது ஒருநாள் எதிர்ப்பு வலுப்பெறும். பிரஞ்சியர்களின் விரிவாக்க கனவு மீண்டும் துளிர்க்கும் என்று எண்ணி, புதுச்சேரியை ஒரே மண்ணாக அல்ல, பல சிறு தீவுகளாக மாற்றினர். வடக்கில் கோட்டக்குப்பம், முதலியார் சாவடி, தெற்கில் காட்டுப்பாளையம், ரெட்டிச்சாவடி, மேற்கில் வழுதாவூர், கண்டமங்கலம், தென்மேற்கில் மண்டகப்பட்டு, துாக்கணாம்பாக்கம் போன்ற பகுதிகளை ஆங்கிலேயர் தங்களிடமே வைத்துக்கொண்டு, முகாம்களையும் டோல்கேட்டுகளை நிறுவினர். இதன் மூலம் புதுச்சேரி, தொடர்ந்து கண்காணிக்கப்படும் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.எதிர்காலத்தில் பிரஞ்சியர் மீண்டும் விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டால், எளிதாகச் சுற்றிவளைத்து கட்டுப்படுத்த முடியும் என்பதே இதன் பின்னணி. இதனால் தான்.. புதுச்சேரி, முத்தியால்பேட்டை அடுத்து கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் என, தமிழக பகுதிகளிலும், அதனை தொடர்ந்து பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரியக்காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் என்று புதுச்சேரி பகுதிகளிலும் மாறி மாறி வருகிறது. இன்றைக்கு புதுச்சேரி மாநிலத்தின் வரைபடம் ஆந்திரா, கேரளா தமிழகத்தின் நடுவே சிதறிக் கிடந்தாலும் புதுச்சேரியின் ஒவ்வொரு துண்டும், ஊர்களும் வரலாற்றின் பக்கங்களின்தனித்துவமாக தான் தனித்து பெருமையுடன் நிற்கிறது.இப்போது புரிந்ததா... புதுச்சேரி பகுதிகள் ஏன், துண்டு துண்டாக சிதறி கிடக்கின்றது என்று...