நல்லுார் ஏரி தண்ணீர் மதகு வழியே வெளியேறும் அவலம்
கனமழைக்கு நல்லுார் ஏரி நிரம்பிய நிலையில், கடந்த 5 நாட்களாக மதகு வழியே தண்ணீர் வெளியேறி விரயமாகிறது.பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல் திருபுவனை அடுத்த நல்லுார் ஏரியும் நிரம்பியது. ஆனால் புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் ஏரியின் நீர் மேலாண்மையை பராமரிக்காததால், கடந்த 3ம் தேதி முதல் மதகு வழியே தொடர்ந்து 24 மணி நேரமும் தண்ணீர் வெளியேறி விரயமாகி வருகிறது.இதனால் நல்லுார் கிராமத்தில் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாக்களில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் காலி மனைகள் என, 40 ஏக்கர் பரப்பளவில் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வெள்ளமென தேங்கியுள்ளது.புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு ஊழியர்கள் இதை கண்டும் மதகை அடைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் உடனடியாக ஏரியில் தண்ணீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.