வாகனம் ஓட்டி சிக்கிய 19 சிறார்களின் பெற்றோருக்கு போக்குவரத்து போலீஸ் கடும் எச்சரிக்கை தினமலர் செய்தி எதிரொலி
புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் நடந்த வாகன சோதனையில் வாகனம் ஓட்டி சிக்கிய 19 சிறார்களின் பெற்றோர்களை அழ ைத்து, போலீசார் கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.புதுச்சேரியில் 18 வயதிற்கு குறைவான சிறார்கள் வாகனம் இயக்கி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199(ஏ) கீழ், சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது மோட்டார் வாகனத்தின் உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் டோல்கேட் அருகே சிறார்கள் ஒட்டி வந்த பைக், பஸ் மோதிய விபத்தில் 2 சிறார்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மட்டும் 10 சிறார்கள் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து தினமலரில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீசார் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து நேற்று மாலை திடீர் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.கிழக்கு போக்குவரத்து எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்த வாகன சோதனையில், பைக் ஓட்டி வந்த 15 சிறார்கள், சிவாஜி சிலை அருகில் நடத்திய சோதனையில், 4 சிறார்கள் சிக்கினர். இவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர்.போலீஸ் நிலையம் வந்த சிறார்களின் பெற்றோருக்கு, சிறார்கள் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் தண்டனை, அபராதம் தொடர்பான சட்ட விதிகள் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர்களை கைது செய்வோம். முதல் முறை என்பதால் எச்சரிக்கையுடன் விடுக்கிறோம். அடுத்த முறை இந்த வாகனங்கள் சிக்கினால், கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.