உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; தி.மு.க., பிரமுகர் மகன் உட்பட 2 பேர் கைது

ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு; தி.மு.க., பிரமுகர் மகன் உட்பட 2 பேர் கைது

திருபுவனை; திருபுவனையில் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தி.மு.க., பிரமுகர் மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, திருபுவனை தெற்கு சர்வீஸ் சாலையில் செந்தில்குமார், 50; என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல் மீது நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். ஓட்டலின் முன் அமைக்கப்பட்டிருந்த இரும்பு சீட் சேதம் அடைந்தது.திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இ்ன்ஸ்டெக்டர் குமரவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, வெடிகுண்டு வீசியது திருவாண்டார் கோவிலை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணபிரியன் 24; பெரியபேட்டை சேர்ந்த பாலு மகன் பிரபாகரன் 19; என்பது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில், ஓட்டல் உரிமையாளரான செந்தில் குமாரின் மகன் ராகுலுக்கும், சரவணபிரியனுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இதற்கிடையே, சரவணனபிரியன், திருபுவனை பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்ததால், பெண்ணின் குடும்பத்தினர் சரவணபிரியனிடம் பேச்சுவார்த்தை இன்றி இருந்தனர்.சரவணபிரியன் நேற்று முன்தினம் திருபுவனையில் உள்ள ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்கச் சென்றபோது, அவரது மாமனாரும், ராகுலும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, சரவண பிரியனை பார்த்து, அவரது மாமனார் தரக்குறைவாக திட்டினார். அதைக்கேட்டு ராகுல் சிரித்தார். மாமனார் தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டு ராகுல் சிரித்ததால் ஆத்திரம் அடைந்த சரவணபிரியன் தனது நண்பரான பிரபாகரனுடன் சேர்ந்து ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை