உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறடி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

நுாறடி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

புதுச்சேரி: நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளில் ஒன்று நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம், பழுதடைந்ததை தொடர்ந்து அதனை நவீன தொழில் நுட்பத்தில் சீரமைக்கும் பணி கடந்த 8 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இதற்காக பாலத்தின் கிழக்கு பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் மேற்கு பகுதி நடுவில் கிரில் வைத்து இரண்டாக பிரித்து இரு வழி போக்குவரத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.இதனால், இந்திரா சதுக்கத்தில் இருந்து நுாறடி சாலை மேம்பாலம் துவங்கும் பகுதியில் கடும் நெரிசல் நிலவி வந்தது. இந்நிலையில், இந்த சந்திப்பில் இருந்து சாலையின் மேற்கு பகுதியில் உள்ள நடேசன் நகருக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, நேற்று முன்தினம் தண்ணீர் பெருக்கெடுத்து, பள்ளம் ஏற்பட்டது. இதனால், கடலுார் மார்க்கத்தில் இருந்து பாலத்தில் அணிவகுத்து வரும் வாகனங்கள், இந்த பள்ளத்தை மெதுவாக கடப்பதால், பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இது மரப்பாலம் சிக்னலிலும் எதிரொலிக்கிறது.தகவலறிந்த பொதுப்பணித்துறையினர் உடைந்த குடிநீர் குழாயை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடேசன் நகர் பகுதியில் பள்ளம் தோண்டி புதிய குழாயை பதிக்கும் பணியை மேற்கொண்டனர்.இன்று, நுாறடி சாலையின் கிழக்கு பகுதியில் குழாயை மாற்றிய பின், சாலையில் பள்ளம் தோண்டி குழாயை பதித்த பின், சாலையை சீரமைத்த பிறகே போக்குவரத்து சீராகும். இந்த பணி முடிய எத்தனை நாளாகும் எனத் தெரியவில்லை. ஆததால், குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி