பா.ஜ.,விற்கு எதிராக மாற்று சக்தியை உருவாக்க தொடர்ந்து போராடுவோம் மா.கம்யூ., ராமகிருஷ்ணன் பேச்சு
புதுச்சேரி : மா.கம்யூ., புதுச்சேரி மாநில 24வது மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில் நேற்று வில்லிய னுாரில் நடந்தது.மாநாட்டு ஊர்வலத்திற்கு செயற்குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் சுதா சுந்தரராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த மாநாட்டிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் டபுள் என்ஜின் அரசாக இருக்கும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரேஷன் கடைகளை மூடியது, மின்துறை தனியார் மயமாக்குதல், பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துதல், மின்கட்டணத்தை அதிகரித்தல் ஆகியவை உதாரணங்கள். மக்கள் பிரச்னைகளில் மத்தி அரசு கவனம் செலுத்தவில்லை. எனவே அகில இந்திய அளவில் பா.ஜ.,வை தோற்கடிக்க மாற்று சக்தியை உருவாக்க மா.கம்யூ., தொடர்ந்து போராடும்.இவ்வாறு அவர் பேசினார்.