உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தெருநாய்களுக்கு உணவு போட்டு அட்டூழியம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தெருநாய்களுக்கு உணவு போட்டு அட்டூழியம் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

புதுச்சேரி:லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் அமைதியான சூழ்நிலை கெடுக்கும் வகையில் தெருநாய்களுக்கு உணவு போட்டு ஒரு கும்பல் கெத்து காட்டி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தெருநாய்களுக்கு உணவளிக்க தடை விதித்து உழவர்கரை நகராட்சி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வாக்கிங் செல்லும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ெஹலிபேட் மைதானத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைதியான சூழலுக்கு அச்சுறுத்தும் விதமாக, சுற்றுப்புறங்களில் உள்ள தெருநாய்கள் அனைத்தும் ெஹலிபேட் மைதானத்திற்குள் படையெடுத்து வருகின்றன. அவை, மைதானம் முழுவதும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிக்கின்றன. ஒன்றையொன்று ஆக்ரோஷமாக கடித்து குதறி சண்டை போடுகின்றன. அப்படியே, வாக்கிங் செல்பவர்களையும், குழந்தைகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் வாக்கிங் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் அச்சமடைகின்றனர். மரண பீதியில் உறைந்துபோய், கையில் கிடைப்பதை தெருநாய்கள் மீது வீசி எறிந்து உயிர்தப்பி வருகின்றனர். கெத்து காட்ட... ஹெலிபேடு மைதானம் பகுதியில் ஏற்கனவே, தெருநாய் பெருகியுள்ள நிலையில், சில தனிநபர்கள் தெருநாய்களுக்கு தினமும் பிஸ்கட், சாப்பாடு போட்டு கெத்து காட்டி அட்டூழியம் செய்து வருகின்றனர். மைதானம் முழுவதும் உணவுடன் தினமும் நடந்து சென்று அட்டூழியம் செய்து வருகின்றனர். இவர்களை சுற்றிலும் எந்நேரமும் 25 தெரு நாய்கள் பின்னாலே ஓடுகின்றன. உணவினை அவர்கள், கெத்தாக மைதானத்தில் வீசியதும் ஒட்டுமொத்த தெருநாய்களும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றன. ஒன்றையொன்று கடித்து குதறி துரத்திச் செல்கின்றன. சிறிது துாரம் சென்றதும் அக்கும்பல் மீண்டும் சில பிஸ்கெட்டுகளை வீசி எறிந்து தெருநாய்களை மேலும் வெறிபிடிக்க செய்கின்றனர். உணவு கிடைக்காமல், ஆக்ரோஷம் அடையும் தெருநாய்கள் வாக்கிங் செல்லுவோரையும் அப்படியே துரத்தி கடிக்க பாய்கின்றன. இந்த கும்பலால் தான், ெஹலிபேட் மைதானத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ெஹலிபேட் மைதானத்திலும் தெருநாய்களுக்கு உணவு அளிப்பது சட்டப்படி தவறு. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ெஹலிபேட் மைதானத்தில் தெருநாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகை மைதானத்தின் முக்கிய இடங்களில் உழவர்கரை நகராட்சியும், போலீசாரும் வைக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின்

முக்கிய உத்தரவு விபரம்

தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், அந்தந்த பகுதிகளில் தெருநாய்களுக்கென பிரத்யேகமாக உணவு வழங்கும் கூடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பிரத்யேக கூடத்தில் மட்டுமே பொதுமக்கள் உணவளிக்கலாம். தடையை மீறி பொது இடத்தில் உணவளிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுதும் இந்த உத்தரவு செல்லுபடியாகும். தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவுள்ளன. எனவே, இதை எப்படி கையாள வேண்டும், எந்த மாதிரியான விதிகளை உருவாக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கலாம் என்றும், இதற்காக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்க, தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். தத்தெடுத்த பின் அந்த நாய்களை வளர்க்கும் பொறுப்பு அவர்களை சார்ந்தது. மீண்டும் அந்த நாய்களை தெருவில் விடக்கூடாது. தெருநாய்களை பிடிக்க வரும் நகராட்சி ஊழியர்களை தன்னார்வ அமைப்பினர், நாய் ஆர்வலர்கள் தடுக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை