| ADDED : மார் 09, 2024 02:55 AM
புதுச்சேரி: கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தனி போலீஸ் ஸ்டேஷனை ஏற்படுத்த வேண்டும்.புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீசார், கஞ்சா கும்பலுடன் நெட் ஒர்க் வைத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, போலீஸ் துறையில் போதை தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த பிரிவு, கோரிமேடு போலீஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆனால், இந்த பிரிவுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.கஞ்சாவை பறிமுதல் செய்ய முடியாது. வழக்கு பதிவு செய்ய முடியாது. மேல் விசாரணையும் செய்ய முடியாது. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்களில், கஞ்சா பிடிக்கலாம் வாங்க என்று கூப்பிட்டால், நாலைந்து பேருடன் சென்று, பிடித்து கொடுத்துவிட்டு வந்து விடுகின்றனர்.ஏற்கனவே, சைபர் குற்றங்கள் நடந்தபோது, வழக்கு பதிவு செய்யும் பணி போலீஸ் ஸ்டேஷன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஒன்றும் நடந்து விடவில்லை. பணி சுமையில் பிற மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீஸ் ஸ்டேஷன்களில் திணறி வந்தனர்.அதன் பிறகு, சைபர் குற்றங்களுக்குகென தனி போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் போலீசார், இணைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் டில்லி, குஜராத் என எங்கு இருந்தாலும் தேடி சென்று பிடித்து வந்து சிறையில் அடைக்கின்றனர்.கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமெனில் இதற்காக தனி போலீஸ் ஸ்டேஷனை அமைக்க வேண்டும். தற்போதுள்ள போதை தடுப்பு பிரிவினை தனி போலீஸ் ஸ்டேஷனாக மாற்ற வேண்டும். அப்போது தான் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும்.