உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்க்கை துவங்கப்படுமா?: பட்டதாரி மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்க்கை துவங்கப்படுமா?: பட்டதாரி மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: அனைத்து கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ள நிலையில், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்காமல் உள்ளது.புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 1986ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது. அத்துடன் எம்.பில்., பி.எச்.டி., படிப்புகளையும் நடத்தி, ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருவதோடு, பிற மாநிலத்தவர் மற்றும் நாட்டினருக்கு இங்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் இன்றைக்கு நிறுவனத்தில், ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியில் பண்பாட்டு நிறுவனத்திற்கு பி.எச்.டி., படிப்பில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை.இந்தாண்டு அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கியுள்ளநிலையில், மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் மட்டும் எந்த மாணவர் சேர்க்கைக்கான பணிகளும் துவங்காமல் உள்ளது. இதனால் இந்தாண்டும் மாணவர் சேர்க்கை உண்டா என்று தெரியாமல் உயர்கல்வி வாய்ப்பிற்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர்.மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருக்கும்போது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பி.எச்.டி., படிப்பில் வழிகாட்ட முடியும். பேராசிரியர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு பணியாண்டுகள் இருந்தால் மட்டுமே பி.எச்.டி., வழிகாட்ட ஒப்புதல் கிடைக்கும். ஆனால், அனைத்து பேராசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டதால், பி.எச்.டி., மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இது பி.எச்.டியை., எதிர்பார்திருந்த ஆய்வு மாணவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.எம்.பில்., படிப்பினை பொருத்தவரை 12 இணை பேராசிரியர்கள் இருந்தால் 24 மாணவர்கள் எம்.பில்., படிக்கலாம். ஆனால் ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லாததால் எம்.பிஎல்., படிப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்பட வில்லை.மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சொசைட்டியாகத் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், 9 உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. விண்ணப்ப அறிவிப்பு வரை சென்றது. ஆனால் கடைசி நேரத்தில் லோக்சபா தேர்தல் நன்னடத்தை அறிவிப்பு காரணமாக உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்புவது நிறுத்தப்பட்டது.எனவே இந்த கோப்பினை மாநில அரசு துாசு தட்டி, பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கையையும் இந்தாண்டே துவங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பட்டதாரி மாணவ, மாணவியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை